தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி அருகே உள்ளது நீர்க்குன்றம். 50 ஆண்டுகளுக்கு முன் வயல்வெளியில்பெரிய லிங்கத்தின் மேற்பகுதி கண்டு பிடிக்கப்பட்டு வழி பட தொடங்கினர்.
கடந்தாண்டு மண் முழுவதும் அகற்றிய போது சிவலிங்கம் இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த வக்கீல் காசிநாதன் மற்றும் கிராமத்தினர் அதே இடத்தில் கோயில் கட்ட முடிவு செய்து அமிர்த கடேஸ்வரர் என பெயரிட்டு கோவில் கட்டினர். கட்டட பணி நடைபெறும் போது நந்தியும் கிடைத்தது. ஒருவரின் தோட்டத்தில்2 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் போல உருவம் பொறித்தகல்லும், மற்றொரு வயலில் அதே அளவுள்ள திரிசூலத்துடன் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது. வக்கீல் காசிநாதன் கேட்டுக் கொண்டதின் பேரில் ஆய்வாளரான ராமசாமி கல்லுாரி முதல்வர் கணேசன், ஆய்வு மாணவர் சுதாவுடன் ஆய்வு செய்தார்.
ஆய்வாளர் கணேசன் கூறியதாவது: உருவம் பொறித்த கல் நடுகல் எனப்படும். நீரைமீட்டான் கல் என்றும் சொல்வர். இக்கல் கி.பி. 2 ம் நுாற்றாண்டு காலத்தை சேர்ந்தது. உருவத்தில் மூக்கு நீளமாக இருப்பதால் மூக்கெண்டி என்று அழைப்பர். சிலர் ஆஞ்சநேயர் என்று கூறுவர். பின்கையில் அம்பும், மார்பு வில் உள்ளதாகவும் உள்ளது. அக்காலத்தில் போரின் போது பசுக்களை எதிரிகள் கொண்டு செல்வர்.படையுடன் சென்று எதிரிகளிடம் போரிட்டு பசுக்களை மீட்டு வருவர். அதன் நினைவாக வைத்திருக்கலாம். போரில் விழுப்புண் படும் போர் வீரர் நினைவாகவும் நடுகல் நடுவார்கள். அந்த ஊரின் முக்கியமான போர்வீரன் நினைவாகவும் வைப்பர்.
ஊருக்கு வெளியே, ஏரி கண்மாய் கரைகளில் தான் இருக்கும். நடுகல் திருவண்ணாமலை, செங்கம் பகுதியில் அதிக அளவு காணப்படுகிறது. வேடியப்பனாக வழிபடுகிறார்கள். இப்பகுதியில் இக்கல் தான் முதலாவதாக இருக்கிறது. மற்றொரு கல் ஒருகல்வெட்டு. 16, 17ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். எழுத்துக்கள் ஓரளவு தெளிவாக உள்ளன. கோவில்களுக்கு தானம் கொடுப்பதை 12 ம் நுாற்றாண்டில் கல்வெட்டில் பதித்து வைப்பார்கள்.சிவன் கோவில் என்றால் திரிசூலமும், பெருமாள் கோவில் என்றால் சக்கரமும் இருக்கும். இப்போது கண்டெடுக்கப்பட்ட கல்லில் எழுத்துக்களின் கீழ் திரிசூலம் உள்ளது. இந்த கல்லில் இந்த கல்வெட்டை அழிப்பவர்கள் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ன என்று ஒம்படைகிளையில் உள்ளது. இந்த கல்லை பாதுகாப்பவர்கள் அடி என் முடி மேல், சிதைப்பவர்கள் பாவத்திற்கு ஆளாவார்கள் என்று பொருள்என ஆய்வாளர் கூறினார்.