பதிவு செய்த நாள்
28
செப்
2019 
05:09
 
 நவராத்திரி பூஜையில் தினமும் அம்மனுக்கு பிரசாதம் படைப்பது அவசியம். இதற்காக மைசூரு உளுந்தம்பொடி சாதம், கல்கண்டு பொங்கல், அரிசி சுண்டல், தேங்காய் சாதம், அவல் லாடு ஆகியவற்றைத் தயாரிக்கும் விதம் இங்கு இடம்பெற்றுள்ளது.
மைசூரு உளுந்தம்பொடி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி        –     100கி
உளுந்தம்பருப்பு     –     2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு     –     சிறிதளவு
தேங்காய் துருவல்     –     4 டேபிள் ஸ்பூன்
நெய்         –     2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை         –     1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வத்தல்     –     2
அப்பளம்         –     2
கடுகு         –     அரை ஸ்பூன்
பெருங்காயம்         –     சிறிதளவு
கறிவேப்பிலை         –     1 இணுக்கு
உப்பு         –     தேவையான அளவு
செய்முறை: வாணலியில் நெய்யை சூடாக்கி முந்திரிப்பருப்பு, உளுந்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.  வறுத்த உளுந்தம் பருப்பை, சன்ன ரவை போல பொடி செய்யவும்.  மிளகாயை கிள்ளி வைக்கவும். அரிசியை குழையாமல் பக்குவமாக வடித்துக் கொண்டு அதில் தேங்காய் துருவல், உளுந்தம்பொடி, உப்பு, சர்க்கரை, கறிவேப்பிலை, நெய் சேர்த்துக் கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தபின் அப்பளத்தை பொரிக்கவும். அதன் பின் கடுகு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். சாதத்தில் பொரித்த அப்பளம், தாளிதம் சேர்த்து கிண்டவும் சுவையான சாதம் ரெடி.
கல்கண்டு பொங்கல்
தேவையான பொருட்கள்
அரிசி-     –     1 கப்
பால்    –    2 கப்
கல்கண்டு    –     1 கப்
நெய்-     –     3 கப்
தண்ணீர்     –     22 கப்
முந்திரிபருப்பு     –     தேவையான அளவு
திராட்சை     –     தேவையான அளவு
ஏலக்காய்     –     தேவையான அளவு
செய்முறை: அரிசியை நன்றாகத் தண்ணீரில் கழுவி எடுக்கவும். பால், தண்ணீருடன்
அரிசியைச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் கல்கண்டை தனியாக தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கல்கண்டு கரைசலை வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும். வேக வைத்த அரிசியை கொதிக்கும் கல்கண்டு கரைசலில் நன்றாக கலக்கவும். அதில் நெய்யைச் சேர்க்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பு,
திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காயைப் பொடி செய்து அதன் மீது தூவவும். அம்பிகையின் நைவேத்யத்திற்கு சூடான கல்கண்டு பொங்கல் ரெடி.
அரிசி சுண்டல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி-     –  1 கப்
பாசிப்பருப்பு     –  25 கிராம்
மிளகாய் வத்தல் – 3
கடுகு- – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள்  – அரை ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
உப்பு     –     தேவையான அளவு
எண்ணெய்     –     3 ஸ்பூன்
கறிவேப்பிலை     –     தேவையான அளவு
தேங்காய் துருவல் –     தேவையான அளவு
செய்முறை: பச்சரிசியை சுத்தம் செய்து வாணலியில் இட்டு நன்றாக வறுத்து தனியாக
வைக்கவும். பிறகு பாசிப்பருப்பை வாணலியில் இட்டு லேசாக சூடு செய்து தனியாக
வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு, உளுந்தம்பருப்பு,
மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்து பின்னர், அதில் தேவைக்கு தண்ணீர் விட்டு நன்றாக
கொதிக்க விடவும். கொதிக்கும்போது வறுத்த அரிசி, பாசிப்பருப்பு, தேங்காய்த்துருவல்
போட்டு வேக வைக்கவும். குறைவான தீயில் நன்றாக வெந்ததும் பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். இப்போது சுவையான அரிசி சுண்டல் தயாராகி விடும்.
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 4
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை     – தேவையான அளவு
உப்பு     – தேவையான அளவு
கடுகு     – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு- – 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு-     –  2 ஸ்பூன்
செய்முறை: அரிசியை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் ஆற வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து தேங்காய்த் துருவலை அதில் சேர்த்து வதக்கி ஆற வைத்துள்ள சாதத்தில் போடவும். உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கிளறவும். கொத்துமல்லி தழையைப் போட்டுப் பரிமாறவும்.
அவல் லாடு
தேவையான பொருட்கள்
அவல்    –    200 கி
பொட்டுக்கடலை –     100 கி
சர்க்கரை     –     250 கி
நெய்     –     200 கி
தேங்காய்     –     அரை முடி
ஏலப்பொடி     –     அரை ஸ்பூன்
செய்முறை: அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து மாவாக இடித்துக் கொள்ளவும். சர்க்கரையை இடித்து சலித்து  மாவுடன் சேர்க்கவும். தேங்காயைத் துருவி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக்கி, வாணலியில் சிறிது நெய்யை சூடாக்கி வறுத்தெடுக்கவும். மீதி நெய்யை காய்ச்சி மாவில் சேர்த்து, தேங்காய்துருவல், முந்திரி, ஏலப்பொடியை கலந்து சிறு உருண்டைகளாக உருட்டினால் அவல் லாடு தயாராகி விடும்.