பதிவு செய்த நாள்
01
அக்
2019
03:10
உடுமலை:உடுமலை பகுதி கோவில்களில், நவராத்தியை ஒட்டி சிறப்பு பூஜை மற்றும் அலங் காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவில்களில் நவராத்திரி விழா நேற்றுமுன்தினம் (செப்., 29ல்) துவங்கியது. நவராத்திரி இரண்டாம் நாளான நேற்று (செப்., 30ல்), உடுமலை சுற்றுப்பகுதி வீடுகளில் அம்பாளை ராஜராஜேஸ்வரியாகவும், கவுமாரி தேவியாகவும் பாவித்து, முல்லை பூக்களால் அலங்காரம் செய்து, துதி பாடல்கள் பாடி கொண்டாடினர்.
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று (செப்., 30ல்) அம்மனுக்கு, காலையில் சிறப்பு அபிஷேகமும், பகல், 12:30 மணிக்கு சிவபூஜை அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. சிறப்பு வழிபாட்டுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இன்று 1ல், சேலம் கோட்டை மாரியம்மன் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது.
தில்லை நகர், ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், ரத்தினாம்பிகை அம்மனுக்கு, சிவப்பு நிற பட்டுடுத்தி, மலர் அலங்காரத்துடன் ரத்தினலிங்கேஸ்வரர் சுவாமிகளுடன் தீபராதனை நடந்தது. பக்தர்கள், பஜனை பாடல்கள் பாடி, வழிபட்டனர்.உடுமலை முத்தையா பிள்ளை லே அவுட் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில், 11ம் ஆண்டு நவராத்தரி விழா துவங்கியது. விழாவில் நேற்று (செப்., 30ல்) அகிலாண்டேஸ்வரி அம்மன் துர்க்கை அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.