பாண்டவர், கவுரவர்களுக்கு ஆசிரியராக இருந்தவர் துரோணாச்சாரியார். அவர் ஒருமுறை, “உங்கள் இரண்டு அணியினரையும் சந்திக்க நாளை மாலை வர இருக்கிறேன். அப்போது உங்களின் மாளிகை நிறைந்திருக்க வேண்டும்” என்றார். சகோதரர்களுடன் ஆலோசித்தான் துரியோதனன். மாளிகை எங்கும் மலை போல பஞ்சை குவித்தான். மறுநாள் குருநாதரால் வாசலில் கால் வைக்க முடியவில்லை. அதைக் கண்ட துரோணாச்சாரியார் “சபாஷ்! துரியோதனா! மாளிகையை நிறைத்து விட்டாயே!” என்று சொல்லி விட்டு புறப்பட்டார். கவுரவர்களின் முட்டாள்தனத்தால் குருநாதருக்கு வருத்தம் மிஞ்சியது. பின்னர் பாண்டவரைக் காணச் சென்றார். “வாருங்கள் குருநாதரே!” என்று பன்னீர் தெளித்து வரவேற்றான் தர்மன். விளக்குகள் சுடர் விட்டு பிரகாசித்தன. துரோணருக்கு உண்ண விருந்தும், பருக நீரும் கொடுத்தனர். ஆசி பெற்றனர் பாண்டவர்கள். கிளம்பும் போது “தர்மா! வீட்டை நிறைத்து வைக்கச் சொன்னேனே... ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லையே!” எனக் கேட்டார். “குருநாதா! எங்கும் தீபங்களின் ஒளியும், எங்கள் மனதில் அன்பும் நிறைந்திருக்கிறது” என்றார். துரோணரும் அவர்களின் புத்திசாலித்தனம் கண்டு மகிழ்ந்தார்.