மயிலாடுதுறை: சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் நடைபெற்ற தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அண்ணன்கோவில் கிராமத்தில் அருள்மிகு குமுதவல்லி நாச்சியார் சமேத அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத் தலங்களில் 39 வது திவ்யதேசமும், ஞானஸ்வரூபியான குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமான அண்ணன்பெருமாள் கோயிலில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இக்கோவிலின் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. புரட்டாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தெப்போற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. அதனை முன்னிட்டு குமுதவள்ளி நாச்சியார் உடனாகிய அண்ணன் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின் கோவிலில் இருந்து புறப்பட்ட குமுதவல்லி நாச்சியாரும், அண்ணன் பெருமாளும் திருவெள்ளக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து தெப்பம் திருவெள்ளக்குள புஷ்கரணியில் மூன்று முறை வலம் வந்தது. தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.