பதிவு செய்த நாள்
12
அக்
2019
11:10
திருப்பத்துார்: அம்பலுார் பாலாற்றில், கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. வேலுார் மாவட்டம், திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி பேராசிரியர் பிரபு கூறியதாவது: வாணியம்பாடி அடுத்த, அம்பலுார் அருகே, தேங்காய் தோப்பு வட்டத்தில், பாலாற்றங்கரையில் பாதி உடைந்த நிலையில், ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.இயந்திரத்தில், இப்பகுதியில் துார் வாரிய போது, நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. இந்த நடுகல்லை ஆய்வு செய்ததில், கி.பி., 12ம் நுாற்றாண்டை சேர்ந்த, பிற்கால சோழர்கள் ஆட்சியைச் சேர்ந்தது என, தெரிய வந்தது.
நடுகல்லில், ஒரு வீரனின் வலது கையில், போர் வாள் உள்ளது. இடது கையில், கேடயம் உள்ளது. போரில் எதிரி விட்ட அம்பு, வீரனின் மார்பில் பாய்ந்து இறந்து கிடக்கிறார். கல்லின் இடது பக்க மேல்புறத்தில், இரு பெண்கள், வீரனை தேவலோகத்திற்கு அழைத்து செல்வது போல உள்ளது. உடைந்த நிலையில், நடுகல்லின் மேற்புறம் மட்டும் கிடைத்துள்ளது. அதை, இப்பகுதி மக்கள், சலவை கல்லாக பயன்படுத்துகின்றனர். கல்லின் கீழ்புறம் காணவில்லை. இது போன்ற நடுகல், இப்பகுதியில் நிறைய உள்ளது. தொல்பொருள் ஆய்வுத்துறையினர், ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.