கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரம் குங்குமசுந்தரி அம்மன் சன்னதியில் வளைகாப்பு நடத்தினால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் அமையும். ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மா சிவதரிசனத்திற்காக கைலாயம் சென்றார். அங்கிருந்த முருகனை பொருட்படுத்தவில்லை. முருகன் தடுத்த போது, ‘நானே படைப்புக் கடவுள்“ என ஆவணத்துடன் பதிலளித்தார். அதனால் வெகுண்ட முருகன், படைப்பிற்கு ஆதாரமான ‘ஓம்‘ என்னும் பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். பொருள் தெரியாமல் விழிக்கவே, பிரம்மாவின் படைக்கும் தொழிலைப் பறித்தார்.
மந்திரத்தின் விளக்கம் சிவனுக்கும் தெரியவில்லை. எனவே முருகன் தந்தையான சிவனுக்கு குருவாக உபதேசம் செய்தார். இத்தலமே ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையாக திகழ்கிறது. உபதேசம் பெற சிவன் வந்த போது, பார்வதி உடன் வந்தாள். அவளை குறிப்பிட்ட இடத்தில் இருக்கச் சொல்லிய சிவன், தான் மட்டும் சுவாமிமலைக்கு புறப்பட்டார். பார்வதி தங்கிய இத்தலமே ‘உமையாள் புரம்‘ எனப்பட்டது. இங்கு வாழ்ந்த கமலா என்னும் பக்தையின் கணவர் உடல்நலக்குறைவால் உயிருக்கு போராடினார். தாலிபாக்கியம் நிலைக்க வேண்டி அந்தப்பெண் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தாள். அம்மன் அருளால் கணவரின் குணமடைந்தார். இதனால் அம்மனுக்கு ‘குங்கும சுந்தரி“ என பெயர் ஏற்பட்டது. அம்மனின் முன் மகாமேரு சக்கரம் உள்ளது. பெண்கள் சுமங்கலியாக வாழவும், கன்னிப்பெண்கள் நல்ல மணவாழ்வு அமையவும் குங்கும அர்ச்சனை செய்கின்றனர். சுகப்பிரசவம் ஏற்பட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பும் இங்கு நடத்துகின்றனர். இத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர் வில்வவனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகுசடைமுடிநாதர் கோயில் மற்றும் திவ்ய தேசங்களான கபிஸ்தலம், புள்ள பூதங்குடி உள்ளன.
* எப்படி செல்வது : கும்பகோணம் – திருவையாறு ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உமையாள்புரம்