பதிவு செய்த நாள்
16
அக்
2019
05:10
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதக் கலசம் பெற்றனர். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண முடிவு செய்தனர். அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி, விநாயகர் அமுத கலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில், ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் விழுந்தது. அதுவே சுயம்பு லிங்கமாக மாறியது. அவரே இத்தல அமிர்தகடேசுவரர்.
இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் அதிதி தினம்தோறும் வந்து வழிபட்டாள். தன் தாயின் வழிபாட்டை எளிதாக்க எண்ணி, இந்திரன் இத்தல இறைவனையும் பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்துச் செல்ல முற்பட்டான். அவன் ஆணவத்தை அடக்கும் பொருட்டு, தல விநாயகர் விசுவரூபம் எடுத்து தேரைக் காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்ததாம். பிழை உணர்ந்த இந்திரன் ருத்திர கோடி ஜபம் செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பாபநிவர்த்தி பெற்றான். அப்படி, இந்திரன் ருத்ரகோடி ஜபம் செய்து லிங்கம் பிரதிஷ்டை செய்த அக்கோயில், இத்தலத்தின் கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில் ருத்ரகோடீஸ்வரர் கோயில் என்ற பெயரில் விளங்குகிறது. அமிர்தத்தால் உருவான இந்த இறைவனை வணங்கினால் மரண பயம் நீங்கி வாழலாம்.