பதிவு செய்த நாள்
17
அக்
2019
11:10
திருப்புவனம் : திருப்புவனம் புதுார் காளியம்மன் கோயிலில் மழை வேண்டி புரட்டாசி முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. இங்கு வருடம் தோறும் புரட்டாசியில் காப்பு கட்டி விரதமிருந்து முளைப்பாரி விழா நடத்தப்படுவது வழக்கம், இந்தாண்டு திருவிழா கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
14ம் தேதி திங்கள் கிழமை திருவிளக்கு பூஜையும் மறுநாள் பால்குட ஊர்வலமும் மாலையில் முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.இதேபோல் திருப்புவனம் அருகே பழையனுார் அழகுநாச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த அக்.8 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.தொடர்ந்து தினசரி அம்மனுக்கும், கிராம பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக,ஆராதனை நடைபெற்றது.முளைப்பாரியை மந்தையம்மன் கோயிலிருந்து பக்தர்கள் சுமந்து, அழகுநாச்சியம்மன் கோயில், கண்மாய் கரை திடல், பெரியநாச்சியம்மன் கோயில், ஊர்க்காவலன் கோயில், சந்தனக் கருப்பு கோயில், முருகன் கோயில், நவநீத பெருமாள் கோயில், மார்க்கண்டேயர் கோயில் உள்ளிட்ட கிராம தேவதைகளின் கோயில் வழியாக வந்த முளைப்பாரி ஊர்வலம் பரிபூரண விநாயகர் கோயில் முன் இறக்கி வைக்கப்பட்டது. பின்னர் அங்கு விசஷே பூஜைகள் செய்யப்பட்டு கோயில் அருகே உள்ள அய்யா ஊரணியில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.