பதிவு செய்த நாள்
18
அக்
2019
12:10
அவிநாசி:பழங்கால கல்வெட்டுகளை, டிஜிட்டல் மயமாக்கும் பணி துவங்கியுள்ளது என, இந்திய தொல்லியல் துறை இயக்குனர் (கல்வெட்டு) முனிரத்னம் கூறினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி பழங்கரையில் உள்ள தனியார் பள்ளியில், தொல்லியல் துறை சார்ந்த, கல்வெட்டு கண்காட்சி துவங்கியது.
இதில் பங்கேற்ற, இந்திய தொல்லியல் துறை இயக்குனர் (கல்வெட்டு) முனிரத்னம் கூறியதாவது: கர்நாடக மாநிலம் மைசூரு, தொல்லியல் துறை இயக்குனர் அலுவலகத்தில், கடந்த, 1886ல் கண்டறியப்பட்ட கல்வெட்டு துவங்கி, 2019ம் ஆண்டு வரையிலான, 76 ஆயிரம் கல்வெட்டுகள், பேணி, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடந்து வருகிறது.இதன் மூலம், கல்வெட்டு சார்ந்த ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கம்ப்யூட்டர் உதவியுடன், இணையதளத்திலேயே, அந்தந்த கால கட்டத்திற்குரிய கல்வெட்டுகள் குறித்து, துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். கல்வெட்டில் உள்ள எழுத்துகளை அந்தந்த மொழியிலேயே அறிந்துகொள்ளும் மொழி பெயர்ப்பு வசதியும், இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்ட உள்ளது. இந்திய அளவில், தமிழகத்தில் தான், மிக அதிகளவு கல்வெட்டுகள் உள்ளன. மெகா வடிவில் உள்ள, இவற்றின் படிவங்களை ஸ்கேன் செய்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது, சவாலான பணி. இப்பணிகள், ஒன்றரை ஆண்டில் நிறைவு பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.