இந்த சப்த மாதர்கள் அருள்வது காஞ்சி கயிலாசநாதர் கோயிலில், ராஜசிம்மேச்சரம் எனப்போற்றப்படும் இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மணற்கற்கள் என்று கூறப்படும் ஒருவகைக் கல்லால் உருவாக்கப்பெற்றவை. அவை கருங்கற் சிற்பங்களின் உறுதித் தன்மையை விட சற்றுக் குறைவு உடையவை. அந்த மணற்கற்சிற்பங்களை வழுவழுப்பாகச் செய்ய இயலாது. அதனால்தான் ராஜசிம்ம பல்லவன், கச்சிப்பேட்டுப் பெரிய தளியில் எடுத்த மணற் கற்சிற்பங்களின் மீது சுண்ணாம்புக் காரையைப் பூசி, அதன் மேல் வண்ணங்களைத் தீட்டச் செய்தான். இன்றைக்கும் கயிலாசநாதர் கோயில் சிற்பங்கள் சிலவற்றில் பழைய சுண்ணாம்புக் காரையையும், அதன்மேல் வண்ணங்கள் தீட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். திரு ச்சுற்றின் மேற்புறம் சப்த மாதர் ஏழு பேரும் நீண்ட ஆசனம் ஒன்றில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.