பதிவு செய்த நாள்
25
அக்
2019
11:10
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், வாய்க்காலை சுத்தம் செய்தபோது, சாக்குமூட்டையில் இருந்து, 2 அடி உயரமுள்ள, ஐம்பொன் ஆண்டாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஓலைப்பட்டிணம் கழிவுநீர் வாய்க்காலை, நேற்று காலை, 10க்கும் மேற்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கால்வாயில், சாக்குப்பை ஒன்று, கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அதை, துப்புரவு பணியாளர்கள் பிரித்து பார்த்தபோது, சிலை ஒன்று இருந்தது. இதுகுறித்து, கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று, சிலையை மீட்டு, ஆய்வு செய்த போது, 2 அடி உயரமுள்ள, ஐம்பொன்னாலான ஆண்டாள் சிலை என்பது, தெரிய வந்தது. மர்மநபர்கள், பட்டறையில் இருந்து, ‘பாலீஷ்’ செய்யும் முன், சிலையை திருடி, மறைத்து வைக்க, கழிவுநீர் வாய்க்காலில் போட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள சிலைகள் செய்யும் பட்டறைகளில், போலீசார் விசாரித்து வருகின்றனர். கண்டெடுக்கப்பட்ட சிலை, கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.