பதிவு செய்த நாள்
26
அக்
2019
12:10
அயோத்தி:உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், 5.51 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, தீபாவளி விழா நேற்று மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், இரண்டு ஆண்டுகளாக, தீபாவளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக, இந்த விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அயோத்தியில், ராமாயணத்தை வர்ணிக்கும் வகையில், அலங்கார வண்டிகள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். பின், மாலையில், ராமர் - சீதா திருமணம், ராமர் பட்டாபிஷேக வைபவங்கள் நடந்தன. மாலையில், 226 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை, முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். இதில், பசிபிக் கடல் தீவு நாடான, பிஜியின் துணை சபாநாயகர், வீணா பட்நாகர், உத்தர பிரதேச கவர்னர், ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். தொடர்ந்து, அயோத்தியின், சரயு நதிக்கரையில், 5.51 லட்சம் விளக்குகள் ஏற்பட்டன. அயோத்தியே தீபமயமாக காட்சியளித்தது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அடுத்த மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலம் வரும், கடவுளர்கள்: அயோத்தியில், தீபாவளியை முன்னிட்டு, ராமாயணம் தொடர்பான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி, அயோத்தியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் முகாமிட்டுள்ளனர். ராமர், லட்சுமணர், அனுமார், சீதா மற்றும் கடவுளர் போன்று வேடமிட்டு, அவர்கள் அயோத்தியை சுற்றி வருகின்றனர்.