கும்பகோணம்: கும்பகோணம் அருகே அம்மாசத்திரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் நெல்லிமரத்து முனீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அம்மாச்சத்திரத்திலிருந்து தேப்பெருமாநல்லூர் செல்லும் சாலையில் இரு கிராம மக்களையும் காக்கும் காவல் தெய்வமாக நெல்லிமரத்து முனீஸ்வரன் கோவில் கொண்டுள்ளார். 50 ஆண்டாக திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்திருந்த, இக்கோவில் தற்போது திருப்பணி செய்யப்பட்டுள்ளது. திருப்பணிகள் நிறைவு பெற்று மகாகும்பாபிஷேக விழா நேற்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய பின்னர் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு மாலை 4 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அதைத்தொடர்ந்து காலை 8மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மகாகும்பாபிஷேகமும்,மூலஸ்தான அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனையும், நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழாவில் ராஜசேகரசிவாச்சாரியார் தலைமையில் சிவச்சாரியார்கள் கலந்து கொண்டு பூஜைகளை செய்ய உள்ளனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அம்மாச்சத்திரம் மற்றும் தேப்பெருமாநல்லூர் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.