பதிவு செய்த நாள்
31
அக்
2019
02:10
திருப்பூர், : ”முருகபக்தர் வாடும் போதெல்லாம், வேல் வந்து வழிகாட்டும்; மயில்வந்து துணை நிற்கும்,” என, ஆன்மிக சொற்பொழிவாளர் ருக்மணி பேசினார்.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கந்தபுராண தொடர் சொற்பொழிவு, தினமும் மாலை, 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடந்து வருகிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் ருக்மணி, ’அநுபூதியின் அழகன்’ என்ற தலைப்பில் பேசி வருகிறார்.நேற்று அவர் பேசியதாவது:இறைவழிபாட்டின் போது, வேறு சிந்தனை இல்லாமல், மனம், மொழி, மெய் ஆகிய மூன்றிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும்.
மும்மூர்த்திகளையும், தாயார்களையும் உள்ளடக்கியது முருகா என்ற நாமம். முருகனை அழைத்து வழிபடும் போது, அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.முருகனை நினைத்தால், வேலும், மயிலும் வந்து வேண்டியதை செய்துவிடும். ஆன்மிகத்திலும் அறிவு வளர்க்க வேண்டும். அறிவால் ஆகாதது ஒன்றுமே இல்லை; அடிக்கடி பட்டை தீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அறிவுக்கான அடையாளமே முருகனின் வெற்றி வேல்.வேலாயுதத்தை போல், ஆழ்ந்த, அகலமான, கூர்மையான அறிவு இருக்க வேண்டும்.
முருகபக்தர் வாடும் போதெல்லாம், வேல் வந்து வழிகாட்டும்; மயில்வந்து துணை நிற்கும். பெண்கள், அர்த்தம் தெரியாமல், சமஸ்கிருத மந்திரங்களை படிக்க கூடாது.தவறாக படித்தால், நன்மையைவிட, தீமையே நடக்கும். எனவே, சண்முக கவசம், கந்தர் அனுபூதி போன்ற எளிய தமிழ் பாடல்களை பாடி, இறைவனை வழிபட வேண்டும். மனதார நினைத்து, எந்த தெய்வத்தை வேண்டினாலும், கந்தசாமி நேரில் வந்து அருள்பாலிக்கும்.
பக்தர்கள் கஷ்டமில்லாமல் எளிதாக பெறுவது, இச்சா சக்தி; மனதார பயபக்தியுடன் போராடி, வேண்டி பெறுவது கிரியா சக்தி. இச்சா சக்தியாக, தெய்வானையும், கிரியா சக்தியாக வள்ளியும், முருகனுடன் இருக்கின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.