திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஐப்பசி திருமூல மகோற்சவத்தை முன்னிட்டு மணவாளமாமுனிகள் புறப்பாடு நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஐப்பசி திருமூல மகோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. விழாவின் நிறைவு தினமான நேற்று காலை 8:30 மணிக்கு மணவாள மாமுனிகள் சன்னதியில் இருந்து புறப்பாடாகி, பெருமாள், தாயார், வேணுகோபாலன் சன்னதி களுக்குச் சென்று மங்களாசாசனம் நடந்தது. ஆஸ்தானம் எழுந்தருளி பகல் 10:00 மணிக்கு ஸ்ரீ தேகளீச பெருமாளுடன் ஸ்ரீ ராமானுஜர், மணவாள மாமுனிகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா, ஆஸ்தானம் எழுந்தருளி சேவை சாற்றுமுறை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.