திருநெல்வேலி: தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா நேற்று துவங்கியது. வரும் 4ம் தேதிவரையிலும் நடக்கிறது. தாமிரபரணி மகாபுஷ்கர விழா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்தது. தாமிரபரணி துவங்கும் பாபநாசம் முதல் கடலில் கலக்கும் துாத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரையிலுமாக பல்வேறு படித்துறைகள், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு ஆண்டு நிறைவு புஷ்கர விழா நேற்று துவங்கியது. இதற்காக காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று முன்தினம் திருப்புடைமருதுார் வருகை தந்தார். அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலையில் சந்திரமவுலீஸ்வரர் பூஜையில் பங்கேற்றார்.
தொடர்ந்து பகலில் திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்றார். மாலையில் மீண்டும் திருப்புடைமருதுார் சென்றார். மகாபுஷ்கர விழா கமிட்டி சார்பில் திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூச மண்டபத்தில் நேற்று காலையில் கால்நாட்டு விழா நடந்தது. மாலையில் சிறப்பு பூஜைகள், ஆரத்தி நடந்தது. புஷ்கர நிறைவு விழாவில் வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், திருபனந்தாள் ஆதீனம் உள்ளிட்ட ஆன்மிக தலைவர்கள் பங்கேற்றனர். புஷ்கர விழா நிறைவு 4ம் தேதி மாலையில் நடக்கிறது. திருநெல்வேலி ஜங்ஷன், தைப்பூசமண்டபம் முன்பாக நேற்று இரவில் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர நிறைவு விழா ஆரத்தி நடந்தது. திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூசமண்டபம் முன்பாக தாமிரபரணி ஆற்றங்கரையில் புஷ்கர நிறைவு விழாவிற்கான கால்கோள்விழா நடந்தது. திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் முன்பாக தாமிரபரணியில் நடந்த புஷ்கர நிறைவு விழாவில் காஞ்சி காமகோடி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.