பதிவு செய்த நாள்
02
நவ
2019
11:11
நாகப்பட்டினம் : சூரசம்ஹாரத்திற்காக, முருக பெருமான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி, சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில், நேற்றிரவு நடந்தது.
அப்போது, முருகனின் மேனி வியர்த்தது, பக்தர்களை பரவசத்திற்கு உள்ளாக்கியது.நாகை அடுத்த சிக்கலில், பிரசித்தி பெற்ற, சிங்காரவேலவர் கோவில் உள்ளது. சூரசம்ஹாரம் இக்கோவிலில் தான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கிய முருகப்பெருமான், திருச்செந்துாரில் சூரனை, சம்ஹாரம் செய்தார் என்பது, கந்தபுராண வரலாறு. திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், கச்சியப்பர், சிதம்பரமுனிவர் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், கந்தசஷ்டி விழா, 28ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்தசஷ்டியின், ஐந்தாம் நாள் விழாவான நேற்று, சிங்காரவேலவர் தேவியருடன், திருத்தேரில் எழுந்தருளி, வீதியுலா வந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் இன்று, சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, நேற்றிரவு, அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மெய்சிலிர்த்தனர் அன்னையிடம், சக்திவேலை பெற்று, தம் சன்னிதியில் அமர்ந்த முருகப்பெருமானின் திருமேனியில், வியர்வை பூத்தது. சன்னிதியின் சுவர்களிலும், வியர்வை துளிகள் அரும்பியிருந்த காட்சி, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து, இரவு, 12:00 மணிக்கு, முருகப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.