முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் கருவறையில் இருக்கிறார். சிவயோகி போல தலையில் ஜடா மகுடம் தரித்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள சிவலிங்கத்திற்கு காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாரா தனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவை இரண்டையும் தீபாராதனை ஒளியில் மட்டுமே தரிசிக்க முடியும். இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறம் ’பஞ்சலிங்க’ சன்னதி உள்ளது. மார்கழி மாதத்தில் தேவர்கள் பஞ்சலிங்கத்தை தரிசிக்க வருவதாக ஐதீகம்.