அயோத்தி : விஷ்வ இந்து பரிஷித் அமைத்து வடிவமைத்து கொடுத்துள்ள அமைப்பின்படி ராமர் கோயில் கட்டப்பட்டால், அதன் பணிகள் நிறைவடைய 5 ஆண்டுகளுக்கும் மேலாகும் என கூறப்படுகிறது.
அயோத்தி வழக்கில் நேற்று (நவ.,10) தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், சர்ச்சைக்குரிய இடம் இந்து அமைப்பிற்கே சொந்தம் எனவும், அந்த இடுத்தில் ராமருக்கு கோயில் கட்டலாம் எனவும் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பிருந்தே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை விஷ்வ இந்து பரிஷித் அமைப்பு செய்து வந்தது. 1990 ம் ஆண்டு முதல் ராமர் கோயில் கட்டுவதற்கான மாதிரி வடிவமைப்பை உருவாக்கி வருகிறது. விஷ்வ இந்து பரிஷித் உருவாக்கிய வடிவமைப்பின்படி ராமர் கோயில் கட்டப்பட்டால் அதன் பணிகள் முடிவடைய 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதற்காக 250 கட்டிடக் கலை நிபுணர்கள் பணியாற்ற வேண்டி இருக்கும். கோயில் கட்டுவதற்கு தேவையான 212 தூண்களில் 106 தூண்கள் ஏற்கனவே தயாராகி விட்டன. அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு கோயில் கட்டுவதற்கு தேவையான கற்கள், சிமெண்டகள் கொண்டு வரப்படும். ஒட்டுமொத்த கட்டிடத்திற்கும் ஒயிட் சிமெண்ட் பயன்படுத்தப்பட உள்ளது. சிறு சிறு பாகங்களாக உருவாக்கி, அவற்றை ஒன்று சேர்த்து கோயில் அமைக்க முடியாது என ராமர் கோயில் வழிபாட்டு கண்காணிப்பாளர் அன்னுபாய் சோம்புரா தெரிவித்துள்ளார்.