புதுக்கோட்டை: பேரையூர் நாகநாத சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் தொட்டு தேர் இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய திருக்கோவில்களில் ஒன்று பேரையூர் பிரகதாம்பாள் சமேத நாகநாத சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 4ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்றுக் காலை திருத்தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் தொட்டு இழுத்தனர். மலர்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சர்வ அலங்காரத்துடன் பிரகதாம்பாள் சமேதராக நாகநாத சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.