வில்லியனூர் லூர்து அன்னை ஆலயத்தில் ஏப்.,14ம் தேதி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2012 04:04
புதுச்சேரி:வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய ஆண்டு திருவிழா ஏப்.,14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதுகுறித்து, ஆலய பங்குத்தந்தை ரிச்சர்ட் அடிகளார், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6வது நாளில் ஆண்டு திருவிழா கொடியேற்றம் துவங்குவது வழக்கம். இந்தாண்டு விழா இன்று (ஏப்.,14ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி காலை 5.30 மணிக்கு ஆலயத்தில் வேலூர் ஆயர் சவுந்தர்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மாதா உருவம் பொறித்த கொடி, மாதா குளத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஆலய முன்புறத்தில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்படும். திருவிழா நவ நாட்களில் இருவேளையும் திருப்பலி, மறையுரை, தேர்பவனி ஆகியவை நடக்கின்றன. 22ம் தேதி காலை 7.30 மணிக்கு தமிழக ஆயர் பேரவை துணைச் செயலர் ஜோசப்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது.
அன்று மாலை 5.30 மணிக்கு புதுச்சேரி, கடலூர் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது. 23ம் தேதி காலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகருக்குப் பின், உலகிலேயே லூர்து மாதாவிற்கென்று கட்டப்பட்ட இரண்டாவது ஆலயம் இதுவாகும். உலகில் ஒரு சில சொரூபங்கள்தான் போப் ஆண்டவரால் முடிசூடப்பட்டுள்ளன. அதில் வில்லியனூர் மாதா சொரூபமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ரிச்சர்ட் அடிகளார் கூறினார்.