பதிவு செய்த நாள்
13
நவ
2019
12:11
சென்னை : ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, பெசன்ட் நகர், ரத்னகிரீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. தட்சனின் சாபத்தால், 16 கலைகளை இழந்த சந்திரன், விமோசனம் பெற ஈசனை நாடினார். அவரின் கலைகள் தேயவும், வளரவும், ஐப்பசி மாத பவுர்ணமி அன்று, 16 கலைகளையும் பெற்று மிளிரவும் வரம் பெற்றார்.சகல கலைகளையும் சந்திரன் பெற்று, ஐப்பசி பவுர்ணமி நாளில், அவருக்கு உரிய தானியமான அரிசியால், ஈசனுக்கு அன்னம் செய்து, அபிஷேகம் செய்வதாக ஐதீகம்.
கல்லினுள் உள்ள தேரைக்கும், கருப்பையில் உள்ள ஜீவனுக்கும், உணவு அளிப்பவர் ஈசன். அனைத்து ஜீவன்களுக்கும் உயிர் நாடி அன்னம். அதுவே, பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக விளங்குவதாகவும் வேதங்கள் கூறுகின்றன.இதன் அடிப்படையிலேயே, ஒவ்வொரு ஐப்பசி மாத பவுர்ணமியன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ரத்னகிரீஸ்வரர் கோவில் பெசன்ட் நகரில் அமைந்துள்ளது அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி மாதம், பவுர்ணமி அன்னாபிஷேகம் விமரிசையாக நடத்தப் படுகிறது.இந்தாண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதல், கோவில் வளாகம், பக்தர்களால் வழங்கப்பட்ட, டன் கணக்கிலான காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டன.நேற்று மாலை, 5:00 மணிக்கு, மூலவர் ரத்னகிரீஸ்வரர் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டார். அவருக்கு மகா தீபாராதனை நடந்தது.
விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அருள் பெற்றனர்.மாலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை, 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னாபிஷேக நிகழ்வு அனைத்தும், நேற்று மாலை, 5:30 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய காய்கறிகள், பழங்கள், அரிசி மூட்டைகள் அனைத்தும், 40க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்படுகின்றன.
கோலாகலம்: சென்னை நகரில் மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்; திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில்; சிந்தாதிரிப்பேட்டை, ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், அன்னாபிஷேகம் விமரிசையாக நடந்தது. - நமது நிருபர்- -