பதிவு செய்த நாள்
13
நவ
2019
02:11
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா நடந்தது.ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தில், சிவன் கோவில்களில் அன்னாபிஷேக பூஜை நடப்பது வழக்கம்.
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலிலுள்ள ருத்ரலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா நேற்று (நவம்., 12ல்) நடந்தது. காலை, 10:30 மணிக்கு, 16வகை திரவிய அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தது. ருத்ரலிங்கேஸ்வரர் அன்னம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கோட்டூர் ஆதிசங்கரர் கோவிலில், அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னாபிஷேக அலங்காரத்தில், ஆதிசங்கரர் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நேற்று மாலை நடந்தது.
பொள்ளாச்சி, தேவம்பாடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கங்கா, பார்வதி சமேத அமணேஸ்வரர் கோவிலில், நேற்று (நவம்., 12ல்) காலை, 24 வகையான அபிஷேகம் நடந்தது.மாலை, 4:30 மணிக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. கோவில் செயல் அலுவலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாத ருக்கு அன்னாபிஷேக விழா நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்தது. அன்னத்தாலும், காய், கனிகளாலும் சிவனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வ நாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
* கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்று (நவம்., 12ல்) காலை 10:30 மணிக்கு வேள்வி பூஜையும், மாலை, 5:30 மணிக்கு, பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், குங்குமம், தேன் உட்பட, 16 வகையான பொருட்களால் அபிஷேகம் பூஜை நடந்தது. சிவலோகநாதருக்கு நூறு கிலோ அரிசியில் சாதம் தயாரித்து, அன்னாபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை, 6:15 மணிக்கு அன்னாபிஷேகத்தை கலைத்து, இளநீர் ஊற்றி சிவலோநாத ருக்கு அபிஷேகமும், மலர் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சிவலோகநாதரை வழிப்பட்டனர்.பக்தர்களுக்கு சிவலோகநாதர் மேல் சாத்தப்பட்ட அன்னத்தை சாம்பார் சாதமாக மாற்றி, பிரசாதமாக வழங்கப்பட்டது.