பதிவு செய்த நாள்
09
டிச
2019
12:12
திருவண்ணாமலை: தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை கோவில் வளாகம், போலீசார் கட்டுப்பாட்டில் வந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில் நாளை, மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண, 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, 14 கி.மீ., தூரம் கிரிவலம் செல்வர்.
இதையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி., தலைமையில், மூன்று டி.ஐ.ஜி.,க்கள், 14 எஸ்.பி.,க்கள், 100 டி.எஸ்.பி.,க்கள்., உள்பட, 8,465 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலையேறும் பக்தர்களுக்கு, 80 கமாண்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோவில் வளாகம், கிரிவலப்பாதை உள்ளிட்ட பகுதிகளில், மொத்தம், 344 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மஹா தீபத்தன்று ஆளில்லா குட்டி விமானம் மூலம் கூட்ட நெரிசல் கண்காணிக்கப்படும். நகரை சுற்றி, 18 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும், போலீசார் கட்டுப்பாட்டில் வந்தன. 24 ஆயிரம் கார்கள் நிறுத்த, 90 கார் பார்க்கிங் வசதி, 15 தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைத்து, 2,615 பஸ்களும், தற்காலிக பஸ் ஸ்டாண்டலிருந்து கிரிவலப்பாதை வரை, 60 இலவச பஸ்களும் இயக்கப்படுகின்றன. இன்று முதல், 12 வரை, 36 பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.