தேவிபட்டினம் நவபாஷணம் நடைபாதை பணி முடிவதில் தாமதம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2012 10:04
ராமநாதபுரம் : தேவிபட்டினம் நவபாஷணத்திற்கு செல்லும் நடைபாதை புதுப்பிக்கும் பணி துவங்கி மாதக்கணக்கில் நடந்து வருவதால், நவக்கிரகங்களை வழிபட செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இங்கு சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்கா, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் பயணிகள் உள்ளே நுழைவதற்கே அச்சப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கியம் வாய்ந்த சுற்றுலா ஸ்தலம் தேவிபட்டினம் நவபாஷணம். இங்கு வழிபட்டால் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கையால், நவபாஷணத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள், சிரமமின்றி சென்று வர நடைபாதை புதுப்பிக்கும் பணி ரூ.12.60 லட்சத்தில் துவக்கப்பட்டது. விலைவாசி உயர்வால் திட்டமதிப்பீடு மேலும் உயர்த்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பணிகள் துவங்கியவுடன் நவபாஷணத்திற்கு செல்வதற்கு, கடலில் இறங்கி சிறிது தூரம் நடந்து செல்லும் வகையில் மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டது. இந்த வழி வயோதிகர்கள் செல்ல சிரமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. புதுப்பிக்கும் பணி துவங்கி மாதக்கணக்காகியும், பணி முடியாமல் இழுபறியாகவே உள்ளது. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.21 லட்சத்தில் இங்கு துவக்கப்பட்ட பூங்கா தற்போது முள்செடிகள் வளர்ந்தும், மாலையில் "பார் ஆகவும் இரவில் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறிவிட்டதால் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்குள் செல்லவே அச்சப்படுகின்றனர். ராமநாதபுரம் தேவஸ்தான திவான் மகேந்திரன் கூறியதாவது: கடலுக்குள் வேலை நடப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இரண்டு மாதங்களில் பணி முடிந்து நடைபாதை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.