பதிவு செய்த நாள்
17
டிச
2019
01:12
சபரிமலை:சபரிமலையில் ஒரே நேரத்தில், 36 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என, உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழு அளித்துள்ள பரிந்துரைக்கு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
சபரிமலையில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளது. இக்குழு, அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், சபரிமலையில் ஒரே நேரத்தில், 36 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது:இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. சபரிமலையின் யதார்த்த நிலையை தெரிந்து கொள்ளாமல், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழுவில் வனத்துறை அதிகாரிகள் தான் உள்ளனர். அதனால் தான் இப்படிப்பட்ட பரிந்துரைகள் வருகின்றன. பல நாட்களிலும், ஒரு லட்சம் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை எண்ணிக்கைக்குள் கொண்டு வர, தேவசம் போர்டு விரும்பவில்லை.பரிந்துரை என்ற பெயரில் வெளியாகும் இதுபோன்ற செய்திகள், குழப்பத்தை ஏற்படுத்தும். சபரிமலையில் வசதிகள் மேம்பட, கூடுதல் நிலம் வேண்டும்.பம்பையில் அப்பம், அரவணை விற்பது தொடர்பாக, தந்திரியிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், ஆகம விதிமீறல் இல்லை என, தந்திரி தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.சிக்கல்சபரிமலை அய்யப்பன் கோவில், பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் உள்ளது. இங்கு மேம்பாட்டு பணிகள் செய்ய, வனத்துறையின் அனுமதி பெற வேண்டும்.மலையில் பக்தர்களின் வசதிக்காக, மாஸ்டர் பிளான் பல ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டது.
இதற்காக, தேவசம் போர்டு பணிகளை துவக்கியுள்ளது. இந்நிலையில், பெரியாறு புலிகள் சரணாலய பகுதி எல்லையை, 1 கி.மீ., வரை விரிவுபடுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 777 சதுர கி.மீ.,யில் உள்ள சரணாலய பகுதியை விரிவுபடுத்தும் போது, சபரிமலை, மாஸ்டர் பிளான் பணிகள் பாதிக்கப்படும்.ஏற்கனவே, பம்பை முதல் சன்னிதானம் வரை, ரோப்கார் அமைக்கும் திட்டம், மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டு, வனத்துறையால் முடங்கி உள்ளது.இந்நிலையில், சரணாலய விரிவாக்க திட்டம், மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.