சபரிமலை:ஐயப்பன் வரலாறை சிற்ப வடிவில் விளக்கும் சிற்ப கண்காட்சியை பம்பையில் தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நாளை திறந்து வைக்கிறார். ஐயப்பனின் பிறப்பு, புண்ணியநதி பம்பை ஆகியவற்றை இணைத்து பம்பையில் சிற்ப கண்காட்சி பம்பை நதிக்கரையில் இருந்து கணபதி கோயில் செல்லும் படிக்கட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பந்தளம் மன்னருக்கு ஐயப்பன் குழந்தையாக கிடைத்தது, புலிகள், காடு போன்ற சிற்பங்கள் இடம் பெறுகின்றன. இதனை தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் திறந்து வைக்கிறார்.சன்னிதானத்தில் தண்ணீரின் தரத்தை பரி சோதனை செய்வதற்கான ஆய்வகத்தை சன்னிதானம் சீவேஜ் பிளான்டில், மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் டாக்டர் அஜித்ஹரிதாஸ் தொடங்கி வைத்தார். பம்பையில் ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வகம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது சன்னிதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பஸ்மகுளத்தின் தண்ணீரின் தரம் பராமரிக்கப்படும் என்றும், குடிநீரின் தரம் தினமும் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்படும் என்றும் டாக்டர் அஜித்ஹரிதாஸ் கூறினார். சபரிமலைக்கு கடந்த நான்கு நாட்களாக பக்தர்கள் அதிகம் வருகின்றனர். டிச., 15 இரவு சிறிது நேரம் பெரிய நடைப்பந்தலில் கூட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று அதிகாலை முதல் மீண்டும் கூட்டம் அதிகமானது. மண்டலபூஜைக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.