பதிவு செய்த நாள்
18
டிச
2019
10:12
சபரிமலை, :சூரிய கிரஹணம், மண்டல பூஜைக்காக சபரிமலையில், டிச., 26, 27ல் தரிசனம், நெய் அபிஷேக நேரம் குறைகிறது. அதற்கேற்ப பயணத்தை, பக்தர்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். சபரிமலையில், மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது.
கடைசி இரண்டு நாட்கள் தரிசனம், நெய் அபிஷேக நேரம் மாற்றப்பட்டுள்ளது. டிச., 26 அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்த பின், நெய் அபிஷேகம் துவங்கி காலை, 6:45 வரை நடக்கும். பின் உஷபூஜை முடிந்து, சூரிய கிரஹணத்துக்காக, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். 11:13 மணிக்கு கிரஹணம் முடிந்து, 11:30 மணிக்கு நடை திறக்கப்படும். பின், ஒரு மணி நேரம் நெய் அபிஷேகம் நடக்கும். உச்சபூஜைக்கு பின் பகல், 2:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தங்க அங்கியை வரவேற்க, சரங்குத்திக்கு தேவசம் போர்டு ஊழியர்கள் புறப்படுவர்.
மாலை, 6:30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து, தீபாராதனை நடந்த பிறகே தரிசனம் நடத்த முடியும். கிரஹணம் மற்றும் உச்சபூஜை முடிந்து, நடை அடைக்கப்பட்ட பிறகும், மாலை, 4:30 மணி வரை பக்தர்கள், 18 படியேற அனுமதிக்கப்படுவர். டிச., 27 அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்த பின் காலை, 9:30 மணி வரை நெய் அபிஷேகம் நடக்கும். பின், மண்டல பூஜை பணிகள் தொடங்கும். காலை, 10:00 முதல், 11:40 மணி வரை, கும்ப ராசியில் மண்டல பூஜை நடக்கும்.மதியம், 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டதும், 41 நாள் மண்டல காலம் நிறைவு பெறும்.