பதிவு செய்த நாள்
03
ஜன
2020
11:01
பாப்பநாயக்கன்புதுார்: கோதண்டராமர் கோவிலில் நாளை அதிகாலையில், திருப்பாவையின், 19வது பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.கோவிலின் சிறப்புகோவை - மருதமலை சாலை, பாப்பநாயக்கன் புதுாரிலுள்ள கோதண்டராமர் கோவிலில் வீற்றிருக்கும், சீதா லக்ஷமன சமேத கோதண்டராமரை, நெய்விளக்கேற்றி, மங்கலப்பொருள் சமர்ப்பித்து, சனிக்கிழமைகளில் வழிபட்டால், பிரிந்திருக்கும் தம்பதியர் இணைந்து, இல்லறத்தை துவக்குவர் என்பது ஐதீகம்.
இங்கு ஆண்டுதோறும் கூடாரை வல்லி உற்சவத்தின் போது, ஆண்டாள் எழுந்தருளுவிக்கப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். இதில் பங்கேற்கும் கன்னியருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.மார்கழி மாதத்தை ஒட்டி இக்கோவிலில் நாளை, காலை 5:00 மணிக்கு, குத்து விளக்கு எரிய கோட்டுக்கால்... என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர். பாடலின் பொருள்நான்கு பக்கங்களிலும் குத்துவிளக்குகள் எரிகின்றன. நடுவில் யானைத்தந்தத்தால் செய்த கட்டிலின் மேல் பஞ்சணை போடப்பட்டுள்ளது. கொத்துக்கொத்தான மலர்களைச் சூடிய, நப்பின்னையை தன் பரந்த மார்பில் அணைத்தவாறு, ஒரு கணமும் பிரியாமல் உறங்கிக்கொண்டுள்ளான் கண்ணபிரான்.முதல் தடவை நப்பின்னையை அழைத்த போது, அவள் எழுந்து வரவில்லை. எந்த பதிலும் சொல்லவில்லை. உறங்கிக்கிடந்த கண்ணபிரானும் பதில் கூறவில்லை. அதனால் நப்பின்னையே... நீ உன் கணவனை இவ்வளவு நேரம் ஆகியும் துயில் எழ விடாமல் தடுத்துக்கொண்டு இருக்கிறாயே. இப்படி செய்வது உனக்கு தகுதியான செயல் அல்ல; தர்மமும் அல்ல என பெண்கள் பாடுகின்றனர் என்பதே இப்பாடலின் பொருள்.