பதிவு செய்த நாள்
09
ஜன
2020
10:01
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், இந்த ஆண்டு, வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாக, பக்தர்கள் தெரிவித்தனர்.
பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும்.பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவரான நம்மாழ்வாருக்கு, ஸ்ரீரங்கத்தில், நம்பெருமாள் மோட்சம் அளித்ததால், இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா, சிறப்பானதாக கருதப்படுகிறது. அதனால், இக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, டிச., 26ம் தேதி துவங்கியது. கடந்த, 6ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.அன்று மட்டும், இரண்டு லட்சம் பக்தர்கள், நம்பெருமாளை தரிசித்துள்ளனர். தொடர்ந்து, 21 நாட்கள் நடைபெறும் விழாவுக்கு, 10 லட்சம் பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.டி.வி.எஸ்., குழுமத் தலைவரும், அறங்காவலர் குழு தலைவருமான வேணுஸ்ரீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள், ஹிந்து அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெயராமன் ஆகியோர், உபயதாரர்கள் உதவியுடன், 1 கோடி ரூபாய் செலவில், பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தோரண வாசல்ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ரெங்கா ரெங்கா கோபுரம், தாயார் சன்னதி உட்பட, மூன்று கோபுர வாசல்களின் முன், வாழை மரங்கள், தென்னை மற்றும் பாக்கு பாளை, கூந்தல் பனை என, 15 லட்சம் ரூபாய் செலவில், தோரண வாயில் அமைக்கப்பட்டிருந்தது.ராஜ கோபுரம், தாயார் சன்னதி கோபுரம் ஆகியவற்றுக்கு, 5 லட்சம் ரூபாயில், 236 அடி உயரமுள்ள மாலை சாற்றப்பட்டிருந்தது.மலர் அலங்காரம்தங்கக் கொடி மரம், துறைப்பிரகாரம், சந்தன மண்டபம், ராஜமகேந்திரன் சுற்று மற்றும் நம்பெருமாள் எழுந்தருளும் ஆயிரங்கால் மண்டபம் போன்ற இடங்கள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோவில் வளாகம் மட்டுமின்றி, கோபுரங்கள் அனைத்தும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வண்ண மயமாக ஜொலித்தன.பகவத் கீதைசொர்க்க வாசல் திறப்புக்கு வந்து, நம்பெருமாளை தரிசித்த, ஒரு லட்சம் பக்தர்களுக்கு, விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் பகவத் கீதை புத்தகம் வழங்கப்பட்டது. 25 ஆயிரம் பக்தர்களுக்கு, மஞ்சள், குங்குமம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது.அன்று முழுவதும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பஸ் வசதிகோவிலுக்கு வரும் முதியோருக்காக, 17 இடங்களில், சாய்தள படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. நான்கு இடங்களில் மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி உட்பட, பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவுக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் வசதிக்காக, யாத்ரி நிவாஸில் இருந்து, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு, இரண்டு திருக்கோவில் பஸ்கள் இயக்கப்பட்டன. குடிநீர் வினியோகம்திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில், 51 இடங்களில், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. 12 இடங்களில், நவீன கழிப்பறைகள்; 39 இடங்களில், சிறுநீர் கழிப்பறைகள், ஒன்பது நடமாடும் கழிப்பறைகளும் தற்காலிகமாக அமைக்கப்பட்டன. ஸ்ரீரங்கம் சுற்று வட்டப்பகுதிகளில், வீட்டு இணைப்புகளுக்கும், திருவிழா நாட்களிலும், 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதனால், வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு சென்ற பக்தர்கள், எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல், நம்பெருமாளை தரிசித்து, மன நிறைவு பெற்றனர்.