பதிவு செய்த நாள்
10
ஜன
2020
11:01
திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள, மரகத லிங்கத்தின் உண்மை தன்மை குறித்து, குழு அமைத்து ஆராய வேண்டும், என, திருத்தொண்டர் படை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செங்கோடு கோவில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். சில ஆண்டுகளுக்கு முன்பு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு சொந்தமாக இருந்த மரகதலிங்கம், ஈரோடு மாவட்டத்தில் தனியார் விடுதியில் சிலை தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதன் பின், இந்து சமய ஆணையர் உத்தரவின் பேரில், தற்போது கோவிலில் உள்ள மரகத லிங்கத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. ஆய்வு ரகசியமாக நடத்தப்பட்டதோடு சரி. மரகதலிங்கத்தின் உண்மை தன்மை கண்டுபிடிக்க, தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ராமேஸ்வரம் கோவிலில், மூலவரை படம் எடுத்து வெளியிட்டதாக பரவி வரும் சர்ச்சை தேவையில்லை. பொதுமக்கள் பலர் அறியட்டும்; மறைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மூலவரை புகைப்படம் எடுக்கக் கூடாது என சட்டத்தில் தடையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.