திருப்பதி: திருமலையில் கடந்த ஒரு மாதமாக ரத்து செய்யப்பட்ட சுப்ரபாத சேவை நேற்று முதல் மீண்டும் துவங்கப்பட்டது. திருமலை ஏழுமலையானுக்கு நித்திய கைங்கரியத்தில் முதல் சேவையாக சுப்ரபாதம் விளங்கி வருகிறது. திருமலை தேவஸ்தானம் அதிகாலை 3:00 மணிக்கு இந்த சேவையை நடத்தி வருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஒரு மாத காலமாக சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு திருப்பாவை பாசுர பாராயணம் திருமலை மற்றும் தேவஸ்தானத்திற்கு தொடர்புடைய அனைத்து கோவில்களிலும் நடத்தப்பட்டது. மார்கழி மாதம் நேற்று முன்தினத்துடன் முடிந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் சுப்ரபாத சேவை துவங்கப்பட்டது. அதனால் குலுக்கல் முறையில் வழங்கி வரும் சுப்ரபாத சேவைக்கான டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் முதல் பக்தர்களுக்கு திருமலையில் வழங்கப்பட்டு வருகிறது.