பழநி:பழநி முருகன் கோயில் மூலவரான நவபாஷாண சிலை மற்றும் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சில மாதங்களுக்கு முன் பாலாலய பூஜை நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாகியுள்ளன. நேற்று மூலவர் சிலை பீடத்துக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும்நிகழ்ச்சி நடந்தது. இதனால் காலை 5:30 முதல் காலை 10:30 மணி வரை சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.காலை 6:30 மணிக்கு கலச, யாகபூஜைகள் நடந்தன.பின், கோயில் பிரகாரத்தில் அஷ்டபந்தன மருந்துக்கு பூஜைகள் நடத்தி, உரலில் இடித்து, பீடத்தில் சாற்றப்பட்டது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர்கள் ஜெயச்சந்திரபானு ரெட்டி, குமரவேல், துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.