பதிவு செய்த நாள்
28
ஏப்
2012
10:04
குருவாயூர்: துலாபாரம், அன்ன பிரசன்னம் போன்ற பக்தர்களின் தனிப்பட்ட நிகழ்வுகள் குருவாயூர் கோவிலில் நடக்கும் போது, அவற்றை படமெடுப்பதற்கான டெண்டர், 2 கோடியே 2 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கேரளா, திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் துலாபாரம், அன்ன பிரசன்னம் (முதல் முறையாக குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது), கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் என, தனியாரால் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை சிலர் படமெடுத்துக் கொள்ள ஆசைப்படுவர். ஆனால், அவர்களிடம் உள்ள கேமராக்களை கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்பதால், புகைப்படமெடுக்க, கோவில் சார்பில் ஒப்பந்ததாரரை நியமிப்பது வழக்கம். இதற்காக, ஓராண்டுக்கு புகைப்படமெடுக்க, கோவில் நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்படுவது வழக்கம். வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து, அடுத்தாண்டு மே 31ம் தேதி வரை ஓராண்டுக்கு புகைப்படமெடுப்பதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில், பிரதீப் என்பவர் 2 கோடியே 2 ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்தார். அப்படி டெண்டர் எடுத்தவர், தனியார் நிகழ்ச்சியை ஒரு புகைப்படம் எடுக்க 15 ரூபாயும், "சிடியில் பெற 75 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க, கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.