பதிவு செய்த நாள்
26
ஜன
2020
02:01
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு, நேற்று, களக்காட்டூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் வனபோஜன உற்சவம் நடைபெறும்.இவ்விழாவை முன்னிட்டு, வரதர், ஸ்ரீதேவி, பூதேவியருடன், காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூர் கிராமத்திற்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இந்த உற்சவம் நேற்று நடைபெற்றது. இதற்காக, நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டார். காலை, 9:30 மணிக்கு அக்கிராமத்தை சென்றடைந்து, அங்குள்ள, மரகதவல்லி தாயார் சமேத கரியமாணிக்க வரதர் பெருமாள் கோவிலில், எழுந்தருளினார்.பின், கிராமத்து வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுதோறும் மக்கள், பெருமாளை வரவேற்று, தேங்காய், பழம் வைத்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.மதியம், 1:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, பாலாற்றுக்கு சென்றார். அங்கு,
பெருமாள், தேவியர்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, தீபாராதனை முடிந்து, பாலாற்றில் இருந்து, கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.