குரு ராமகிருஷ்ணரும், சிஷ்யர் விவேகானந்தரும் குறிப்பிடப்பட வேண்டிய குரு, சீடர் உறவு முறையாகும். நாட்டில் சிஷ்யர்கள் தான் குருவை தேடி செல்வது வழக்கம். ஆனால் ராமகிருஷ்ணர் தன்னுடைய சிஷ்யர் விவேகானந்தரை தேடிச் சென்றார். அவருக்கு ஆன்மிக அறிவை வளர்த்தார். ஆன்மிகவாசம், இறைவாசம் உள்ள ராமகிருஷ்ணர், குருபுத்திர சிகாமணியாகவும் விவேகானந்தரை உருவாக்கினார். இவர்கள் இருவரும் பஞ்சாட்சரமாக காணப்படுகின்றனர். இதன் மூலம் ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் கிடைத்த முதல் கொடை விவேகானந்தர்.
விவேகானந்தர் நம் நாட்டுக்கு வழங்கிய கொடை இந்திய ஞானம். ஏழை நாடாக இருந்தாலும், விவேகானந்தர் அளித்து சென்ற ஞானத்தை ஏற்றுமதி செய்வதில் பணக்கார நாடாக இந்தியா உள்ளது. இதனால் தான் வெளிநாட்டினர் அதிகம் பேர் ஞானத்தை தேடி இங்கு வருகின்றனர். நம் நாட்டினுடைய முத்திரையே ஆன்மிகம் தான் என்பதை நாம் உணர வேண்டும். நம்மில் மறைந்து கிடைக்கும் இறைவனை முதலில் உணர வேண்டும் என்பதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார். கோயில்களில் நடராஜர் இருந்தால் மாணிக்கவாசகரும், சிவகாமியும் இருப்பது வழக்கம். அதேபோல் ராமகிருஷ்ணர் இருந்தால் அங்கு விவேகானந்தரும், சாரதாதேவியும் இருப்பார்கள். சோமாஸ்கந்த மூர்த்தி போல் சிவன், பார்வதி நடுவில் முருகன் இருப்பது போல் ராமகிருஷ்ணர், சாரதாதேவியின் நடுவே விவே கானந்தரும் காணப்படுகிறார். நாம் ராமகிருஷ்ணர் மற்றும் சாரதாதேவியின் குழந்தைகள். அவர்கள் கூறும் கருத்துக்களை நம் அடிமனதில் பதியவைத்து அதன்படி நடந்தால் நம்மில் மறைந்து கிடக்கும் இறையுணர்வை வெளிக்கொண்டு வருவதுடன், நம் நாட்டையும் உலக அரங்கில் பக்தி மார்க்கத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.