பதிவு செய்த நாள்
02
பிப்
2020
07:02
திருப்பதி: திருமலையில் ரதசப்தமியை முன்னிட்டு, ஏழு விதமான வாகனங்களில், மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தார்.திருப்பதி, திருமலையில், ஆண்டுதோறும் சூரிய ஜெயந்தி என அழைக்கப்படும் சூரிய பகவான் பிறந்த நாளான ரதசப்தமி அன்று, ஏழு விதமான வாகனங்களில், ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, மாட வீதியில் வலம் வருவது வழக்கம்.
சிறப்பு வழிபாடு: இதன்படி, நேற்று ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு, உற்சவமூர்த்திக்கும், ஏழுமலையானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. காலை, 5:30 மணிக்கு மலையப்ப சுவாமி, முதல் வாகனமான சூரிய பிரபை வாகனத்தில், ஆதிநாராயணனாக மாடவீதியில் வலம் வந்தார். கிழக்கு மாட வீதியில், திருக்குளத்தருகே சூரிய உதயத்திற்காக, வாகன சேவை நிறுத்தப்பட்டது. அப்போது சூரியன், தன் செங்கதிர்களை பரப்பி, மேல் எழும்பி மலையப்ப சுவாமியின் பாதம், நாபி, சிரசு என, கதிர்களை வீசினார்.அப்போது, சுவாமிக்கு கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டது. இதைக் காண, அதிகாலை முதல் மாடவீதியில் பக்தர்கள் திரண்டனர். பின், சின்னசேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம் உள்ளிட்டவற்றில், மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
24 மணி நேரம்: மதியம், 2:00 மணிக்கு, திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள், திருக்குளத்தில் நீராடினர். தொடர்ந்து இரவு வரை, மொத்தம், ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். இதைக் காண, மாடவீதியில் உள்ள கேலரிகளில் ஒரு நாள் முழுவதும் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு, 24 மணி நேரமும் அன்னதானம், குடிநீர், காபி, பால் வழங்கப்பட்டது. ரதசப்தமியை ஒட்டி, திருமலை முழுவதும் அழகிய மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.