பதிவு செய்த நாள்
05
பிப்
2020
03:02
உத்திரமேரூர்: பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், தைப்பூச திருவிழாவின், ஐந்தாம் நாளான நேற்று முன்தினம், திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.
உத்திரமேரூர் அடுத்த, பெருநகர், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில், தைப்பூச திருவிழா, கடந்த 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை, மாலை, சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. இதில், ஐந்தாம் நாள், திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம், இரவு, 10:00 மணிக்கு, பட்டுவதனாம்பிகை அம்பிகைக்கும், பிரம்மபுரீஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. நேற்று காலை, ரிஷப வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தனர். அதை தொடர்ந்து, 11:00 மணிக்கு, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏழாம் நாள் உற்சவமான இன்று காலை, திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் உற்சவமான, அறுபத்து மூன்று நாயன்மார்கள் உற்சவம், வரும், 7ம் தேதி நடைபெறுகிறது. இரு நாட்களிலும், பிரம்மபுரீஸ்வரர் சிவபூதகண திருக்கைலாய வாத்தியக் குழுவினரால், 2,000 பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.