பதிவு செய்த நாள்
07
பிப்
2020
11:02
தலைவாசல்: ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், 58 ஆண்டுக்கு பின், இன்று, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில், பைரவருக்கு பூஜை நடந்து வருகிறது. 850 ஆண்டுக்கு முன், பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னரால் கட்டப்பட்ட இக்கோவிலில், 1962, செப்., 6ல், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், தற்போது கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, 58 ஆண்டுக்கு பின், இன்று காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள், மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று, வாணகோவரையன் வம்சா வளியைச் சேர்ந்த, பொள்ளாச்சி அருகே, சமத்தூரிலுள்ள சங்கர் வாணகோவரையன், கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அவர் குடும்பத்தினருடன், தன் முன்னோரான பொன்பரப்பின வாணகோவரையன், அவரது மனைவி புண்ணியவாட்டி நாச்சியார் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின், அவர், கும்பாபிஷேக விழா மலர் நூலை வெளியிட, கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இரவு, 8:00 மணிக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவிலில் வழிபாடு செய்தார். அவருக்கு, பூரண கும்ப மரியாதை அளித்தனர். தொடர்ந்து, கோபுரத்தில் வைக்கும் கலசங்களை, புனிதநீரை சுமந்தபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்து, கோவிலில் வைத்து வழிபட்டனர். இன்று, கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியர்கள் புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் செய்து வைக்கவுள்ளனர்.