சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் ஜன.,30 அன்று காலை 8:30 முதல் 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சொர்ணகாளீஸ்வரர் உடனாய அம்பாள் பெரிய தேரிலும், சொர்ணவள்ளி மற்றொரு தேரிலும், விநாயகர் சிறு தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து இரவு 7:00 மணிக்கு நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று தீர்த்தவாரி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இரவு சுவாமி புறப்பாடுடன் தைப்பூச விழா நிறைவு பெறும். சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் பாலசரவணன்,கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தன.