கம்பம்: ஆன்மிக தேடல்களில் முதன்மை பெறுவது சிவதரிசனம் என்பர். அதிலும் ஒரே இடத்தில் கோடி லிங்கங்களை தரிசித்தால், மனது பரவசப்படும். நினைத்தாலே மெய்சிலிர்க்க வைக்கும் இறைத்தன்மை அலைபாயும். விண்ணைத்தொடும் மலைமுகடுகள். அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வரும் தென்றல், பறவைகளின் கீச் குரல்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களும், எண்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும் வாழ்ந்ததாகவும், வாழ்ந்து வருவதாகவும் மெய்யன்பர்கள் நம்பும் புண்ணிய பூமியான சுருளி அருவிக்குள் நுழையும் இடத்தில் அமைந்துள்ளது கோடிலிங்கம் கோயில்.
கம்பத்தை சேர்ந்த கணேசன் என்பவரை மேனேஜிங் டிரஸ்டியாக கொண்டு செயல்படும் சிவசக்தி விஸ்வ பிரம்மா டிரஸ்டின் சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல தினமும் யாராவது ஒருவர் ஒரு லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து செல்கின்றனர். ஆரம்பத்தில் மெதுவாக துவங்கிய பணிகள் தற்போது முழு வேகம் எடுத்துள்ளது. 30 ஆயிரத்திற்கும்மேற்பட்ட சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டன. கணேசன் கூறியதாவது: பர்னிச்சர் கடை மற்றும் தொழிலகம் வைத்திருந்தேன். ஒரு நாள் எனது கனவில் வந்த ஒரு உருவம், சுருளிமலையடிவாரம் செல்..அங்கு பிரமாண்ட சிவதரிசனம் காத்திருக்கிறது என்றது. விழித்து பார்த்து வியர்த்து போனேன்.எனது தொழில் மற்றும் வீட்டை விட்டு, இங்கு நான் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த இடத்தில் இந்த கோடிலிங்கம் கோயில் அமைக்கும்முயற்சியில் இறங்கினேன். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தபோதும், தற்போது இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சிவலிங்க பிரதிஷ்டைக்கென வருகின்றனர். அவற்றை பராமரிப்பது சவாலான காரியமாகும். ஆனால் இதுவும் சிவனின் திருவிளையாடல் என்று நினைக்கின்றேன். எனவே பணிகள் தடங்கல் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றன. சிவதொண்டில் பங்கு பெற விரும்புபவர்கள் எங்களுடன் இணையலாம்.72 அடி பிரமாண்ட சிவலிங்கம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நிறைவு பெறும் என்றார். குன்றுதோறும் குமரன் இருப்பான் என்பது சிவவாக்கு. இங்கு குன்றின் மீது சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மனதை பரவசப்படுத்தும் பக்தி உலகத்திற்கு அழைத்து செல்கிறது கோடிலிங்கம் கோயில்.