பத்துமலை: மலேஷியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
தென் கிழக்காசிய நாடுகளான மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் நடக்கும் தைப்பூச விழாவை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். தைப்பூச தினத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் காவடி பால்குடம் சுமந்து அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு மலேஷியாவின் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டனர். விரதம் இருந்தவர்கள் காலை பத்துமலை முருகன் கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டனர். தங்கள் விருப்பங்கள் நிறைவேறியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாக்கு கன்னம் மற்றும் முதுகில் அலகு குத்தி காவடி மற்றும் பால்குடம் சுமந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பத்துமலை அடிவாரத்தில் உள்ள 141 அடி உயர முருகனை வழிபட்டு 272 படிகளில் ஏறி மலை மீதுள்ள முருகனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.