பதிவு செய்த நாள்
08
பிப்
2020
05:02
பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநியில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தைப்பூச விழாவை முன்னிட்டுபாதயாத்திரை பக்தர்கள் பழநி நகரெங்கும் வந்து குவிந்துள்ளனர். பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசவிழா பிப்.,2ல் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்த ஆட்ட பாட்டத்துடன் வருகின்றனர். ஒட்டன்சத்திரம்- - பழநி ரோட்டில் பக்தர்கள் அணிவகுத்து வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பழநி அடிவார பகுதி தங்கும் விடுதிகள், மடங்கள், திருமண மண்டங்கள் நிரம்பி வழிகின்றன.
பாதையோரங்களிலும் பக்தர்கள் தங்கியுள்ளனர்.வின்ச், ரோப்கார் ஸ்டஷேன், கிரிவீதிகள் மட்டுமின்றி, மலைக்கோயிலில் வெளிப்பிரகாரம் வரையிலும் பக்தர்கள் பல மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்லும் பக்தர்கள் வழி ஒருவழிப் பாதையில் செல்வதால் அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு சிரமம் உண்டானது. இருசக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டதால் அப்பகுதியில் செல்ல முடியாமல் பலரும் தவித்தனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் அன்னதானம், குடிநீர், பானங்கள், பழங்கள் வழங்கினர்.
தேரோட்டம்: தைப்பூச விழாவை முன்னிட்டு இன்று (பிப்.,8) மாலை 4:30 மணிக்கு ரதவீதியில் தைப்பூச கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்திருந்தனர்.