பதிவு செய்த நாள்
10
பிப்
2020
10:02
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, ஜன., 24ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 6ம் தேதி மயான பூஜை நடந்தது.நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திரைத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:00 மணிக்கு, பூ வளர்த்தல் எனும் குண்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பங்கேற்றார்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று காலை, 8:00 மணிக்கு நடந்தது. விரதம் இருந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி, ஆற்றில் நீராடி, குண்டம் இறங்க காத்திருந்தனர்.அருளாளிகள், முறைதாரர்கள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் குண்டம் இறங்கினர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.