சென்னையில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் துவக்கம்
பதிவு செய்த நாள்
19
பிப் 2020 10:02
சென்னை : சென்னை, ஐ.சி.எப்., பகுதியில், பிரம்ம குமாரிகளின் சார்பில், அமர்நாத் பனி லிங்க, ஜோதிர் லிங்கங்களின் தரிசன கண்காட்சி, நேற்று துவங்கியது. பிரம்ம குமாரிகள் அமைப்பின், 84ம் ஆண்டு விழா மற்றும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, 12 ஜோதிர்லிங்கம், அமர்நாத் பனிலிங்க தரிசன நிகழ்வு, சென்னை, ஐ.சி.எப்., ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில், நேற்று துவங்கியது.
முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன், நகைச்சுவை நடிகர் செந்தில், பிரம்ம குமாரிகள் அமைப்பின் சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா ஆகியோர், சிவ பரமாத்மாவின் கொடியை ஏற்றினர். முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமர்நாத் பனிலிங்க குகையை திறந்து வைத்து பேசினார். இந்த கண்காட்சியில், குஜராத் சோம்நாத், நாகேஸ்வரர் லிங்கம், ஆந்திரா மல்லிகார்ஜுனர், ம.பி., மஹாகாளேஸ்வர், ஓங்காரேஸ்வரர், மஹாராஷ்டிரா வைத்தியநாதேஸ்வரர், கிரிஸ்னேஸ்வர், திரியம்பகேஸ்வரவர், பீமா ஷங்கர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, உ.பி., காசி விஸ்வநாதர், உத்தரகண்ட் கேதார்நாத் லிங்கங்கள், அமர்நாத் பனிலிங்கம் ஆகியவற்றின் தத்ருப தரிசனம், பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
பனிலிங்க தரிசன வளாகத்தில், தியானம் செய்வதற்கான, தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அபிஷேக லிங்க தரிசனம், விழிப்புணர்வு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாலை நேரங்களில், தேவிகளின் தத்ரூப தரிசனம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 24ம் தேதி வரை ஜோதிலிங்க தரிசனம் நடைபெறுகிறது. தினமும் காலை, 8:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.
|