படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் சிவனே அதிபதி. அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகள் இவருக்குண்டு. அருவ நிலையில் உருவம் இல்லாதவரான சிவன், அருவுருவம் (சிவலிங்கம்), உருவம் (தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், சோமாஸ்கந்தர் முதலான கோலங்கள்) தாங்கியிருக்கிறார். ‘சிவன்’ என்பதற்கு ‘மங்கலம் தருபவர்’ என்பது பொருள். திருமூலர் திருமந்திரத்தில் ‘அன்பே சிவம்’ என்கிறார். அன்பு நெறியைப் பின்பற்றி “அப்பா! வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும். ஆருயிர்க்கு எல்லாம் நான் அன்பு காட்டவேண்டும்!” என சிவனிடம் வேண்டுகிறார் வள்ளலார்.