மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனைக் காலால் உதைத்தார் சிவன். இதன்பின் தனது துாதர்களிடம், ‘‘திருநீறு பூசிய சிவனடியார்களைக் கண்டால் வணங்குங்கள்’’ என உத்தரவிட்டான் எமன். நெற்றியில் பூசியவரைக் காப்பதால் திருநீறுக்கு, காப்பு, ரட்சை என்றும் பெயருண்டு. மதுரையில் அருள்புரியும் சொக்கநாதர் மீது ஞானசம்பந்தர் பாடிய ‘மந்திரமாவது நீறு’ பதிகம் திருநீற்றின் மகிமையை விளக்குகிறது. சுட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல் மூன்றாலும் திருநீறை எடுத்து, ‘சிவாயநம’ என்ற மந்திரம் சொல்லி பூச வேண்டும். இப்படி பூசுவதற்கு ‘திருநீற்று குளியல்’ என்று பெயர். குளித்தபின் நெற்றியில் திருநீறு பூசினால் அது இரண்டாவது முறை குளித்ததற்குச் சமம். இதன் மகிமையை ‘நீறில்லா நெற்றி பாழ்’ என அவ்வையார் எதிர்மறையாகச் சொல்லியுள்ளார்.