தாராட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அசுரர்கள் பறக்கும் கோட்டைகளுக்கு அதிபதியாக இருந்தனர். அக்கோட்டைகளில் பறந்தபடியே விரும்பிய இடத்தில் இறங்கி, உயிர்களை எல்லாம் துன்புறுத்தி வந்தனர். இதையறிந்த சிவன் அசுரர்களுடன் போரிட்டுக் கொன்றார். வெற்றிக்களிப்பில் சிவனுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதுவே மண்ணில் விதைகளாக விழுந்து ருத்ராட்ச மரங்களாக வளர்ந்தன.
சிவனுக்கு வலது கண்ணில் வழிந்த கண்ணீரில் 12 வகையான ருத்ராட்சமும், இடது கண்ணில் வழிந்த கண்ணீரில் 16வகை ருத்ராட்சமும், நெற்றிக்கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரில் 10 வகை ருத்ராட்சமும் உருவாயின. கோடுகளைப் பொறுத்து ஒன்று முதல் 16 முகங்கள் வரை ருத்ராட்சங்களை வகைப்படுத்துவர். ‘ஏக வக்த்ர சிவ சாக்ஷாத்” என்று ஒருமுக ருத்ராட்சத்தை சிவனாகக் கருதுவர். இரண்டு முகம் ருத்ராட்சத்தை அர்த்தநாரீஸ்வரரின் அம்சம் என்பர். இதற்கு ‘கவுரி சங்கர்’ என்றும் பெயருண்டு.