சிவனைத் தவிர வேறு சிந்தனையும் சிவனடியாரான நந்தனாருக்கு இல்லை. தான் வேலை பார்த்த பண்ணையாரிடம் சிதம்பரம் கோயிலுக்குச் செல்ல அனுமதி கேட்ட போதெல்லாம், ‘நாளைக்கு நீ போ’ என ஏதாவது வேலை ஏவிக் கொண்டிருந்தார். வயலே கதி என வாழ்ந்த நந்தனாருக்கு களத்து மேட்டில் இருந்த நெற்குவியல் கூட சிவலிங்கமாகத் தோன்றியது. ஒருநாள் அந்த வயல் பக்கமாக வந்த வண்டிக்காரன் ஒருவன், “ஏ...உன்னைத் தான்....” எனக் கத்தினான். ஆனால், நந்தனார் கவனிக்கவில்லை. மீண்டும் அவன், “ஏ... சிதம்பரம் செல்லும் பாதை இது தானே?” என்றான். ‘சிதம்பரம்’ என்ற சொல் நந்தனார் காதில் தேனாகப் பாய்ந்தது. வயலில் போட்டது போட்டபடி வண்டியை நோக்கி ஓடினார். வேலியோரம் படர்ந்த பூசணிக்காய்கள் திருநீறு பூசிய சிவனடியாராக தெரிந்தது. வண்டிக்காரனை குருநாதராக கருதி வணங்கினார். கால்கள் ‘தையா தக்கா’ என நடனமாட ஆனந்தக் கண்ணீர் பெருகியது. ‘அடியேன் வாழ்வில் நற்கதி அடைந்தேன்” என மகிழ்ந்தார். ‘சிதம்பரம்’ எனக் கேட்டதுமே, மனதால் அத்தலத்தை அடைந்தார். அவரின் பக்தியைச் சொல்ல வார்த்தையில்லை. ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் பாட்டில் இந்த குறிப்பு உள்ளது.